இந்திய திருநாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று  மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.எஸ்.நிஷா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 





தொடர்ந்து அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 168 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறையின் சிறப்பாக பணியாற்றிய 12 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 398 பயனாளிகளுக்கு 9 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 416 மதிப்பீட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளி கல்லூரிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 






மேலும், மயிலாடுதுறை நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவுக்காக பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு 7.30 மணிக்கு வரவழைக்கப்பட்டனர். கொடியேற்றுவதற்காக மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் அவர்கள் வருகை புரிவதாக தெரிவித்த நிலையில் காலை 11 மணிக்குக்கு மேல் ஆகியும் அவர் வராததால் மூன்று மணி நேரத்துக்கு மேலாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருக்கும் ஆவலநிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  




பின்னர், பள்ளிக்கு 11 மணிக்கு மேல் வந்த நகரமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தேசிய கொடியை ஏற்றவும், இறக்கவும் விதிமுறைகள் இருக்கும் சூழலில் இதுபோன்று குடியரசு தினத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி  நடந்துக்கொண்ட விதம்  பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக அவர் மீது தேசிய கொடி அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.