தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இரட்டை சகோதரிகள் விஷம் குடித்து இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரட்டை சகோதரிகள் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியுங்களா? அதன் பின்னணி இதுதான்.


இரட்டை சகோதரிகளின் வேதனை


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காமாட்சி ஜோதிடர் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60), கூலித்தொழிலாளி. இவருக்கு பாமா (34), ருக்மணி (34) என்ற இரட்டையாகப் பிறந்த மகள்கள். இவர்கள்தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காரணம் 34 வயதாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்பதுதான் இவர்களின் தற்கொலைக்கு அடிப்படையான காரணம் ஆகும்.


விஷம் குடித்த பாமா, ருக்மணி


பாமா, ருக்மணி இரட்டைச்  சகோதரிகளும் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த மனவேதனையும், மன உளைச்சலும் அவர்களை வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு தள்ளியுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு மத்தியில் கடந்த மாதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இருவரும் வீட்டில் யாரும் இல்லாத போது  விஷம் குடித்துள்ளனர்.


மயங்கி கிடந்தவர்களை மீட்ட உறவினர்கள்


வெகுநேரம் வரை இவர்கள் வீட்டில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடன் அங்கு வந்த இரட்டை சகோதரிகளின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாமா, ருக்மணி இருவரும் மயங்கிக் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடன் இருவரையும் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


அடுத்தடுத்து இறந்த இரட்டை சகோதரிகளால் சோகம்


இதில், கடந்த 2-ம் தேதி ருக்மணி உயிரிழந்தார். நேற்று பாமா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணம் ஆகாததால் இரட்டை சகோதரிகள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கும்பகோணம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.