டாஸ்மாக்கில் பணியாற்றும் பட்டியலின ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

 

திருவாரூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டாஸ்மாக்கில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டியலின ஊழியர்கள் கடந்த 19 ஆண்டுகளாக அடிப்படை ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வருகிறார்கள். எனவே பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பணிநிரந்தரம் செய்திட தாமதமாகும் பட்சத்தில், இடைக்காலத் தீர்வாக ஊதிய முறையை மாற்றி அமைத்திட வேண்டும். குறிப்பாக மேற்பார்வையாளருக்கு 30 ஆயிரம் ஊதியமும், விற்பனையாளருக்கு 25 ஆயிரமும், உதவி விற்பனையாளருக்கு 20 ஆயிரமும் என்ற முறையில் ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும்.



 

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுமார் 19 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ஏ.பி.சி என்ற சுழற்சி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வியின் அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும்.



கடந்த காலங்களில் சிறு சிறு காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு, நீண்ட காலமாக பணி வழங்கப்படாமல் இருக்கும் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும், அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளை அரசு தன் சொந்த கட்டிடங்களில் கழிப்பறை வசதியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்திட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடையில் பெயர் பட்டியலில் உள்ள நபர்களை கடையில் வேலை செய்ய அனுமதிக்காமல், வெளி நபர்களை கொண்டு கடையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட மேலாளர் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, எனவே மேலாண்மை இயக்குனர் இந்த பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

மேலும் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதுரை, சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.