தஞ்சாவூர்: 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

Continues below advertisement

சங்க தலைவர் வசந்தா தலைமை வகித்து பேசினார். செயலாளர் சரிதா முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜி, இணைச் செயலாளர் ராதிகா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

இந்த காத்திருப்பு போராட்டத்தின் போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் செய்ய வேண்டும். தங்களுக்கான சம்பளத்தை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து நேரடியாக விடுவிக்க வேண்டும், அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்கக்கூடாது, மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேரு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. 

Continues below advertisement

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்க காத்திருப்பு போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்து மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சுகாதார போக்குவரத்து துறை ஓய்வுபெற்றோர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் குமார வேலு ஆகியோர் பேசினர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அனைத்து தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சரிதா முன்னிலை வகித்தார். அரசு பணியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மாத ஊதியத்தை வட்டார அளவிலான கூட்டமைப்பிலிருந்தும், நகர்புற வாழ்வாதார மையங்களில் இருந்தும் விடுப்பதை கைவிட்டு மாவட்ட இயக்க வேளாண்மை அழகிலிருந்து நேரடியாக ஊதியம் விடுவிக்க வேண்டும். பணித்திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு வருடம் 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில் எங்களை ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்க கூடாது. மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 

உதவி திட்ட அலுவலகங்களுக்கு ரூ. 60,000 வட்டார இயக்க மேலாளர்களுக்கு ரூ. 35,000, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 30,000, சமுதாய அமைப்பாளர்களுக்கு ரூ. 30,000 குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் புத்தக பராமரிப்பாளர்களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மாதம் ரூ. 7500 ஊதியம் வழங்க வேண்டும். சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மாதம் ரூ.7500 ஊதியம் வழங்க வேண்டும். சி ஆர் பி களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மாதம் ரூ. 7500 ஊதியம் வழங்க வேண்டும். நகர்புற பகுதிகளில் சமுதாய வள பயிற்றுநர்களை உருவாக்கி அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ. 7500 வழங்க வேண்டும். சமுதாய அமைப்பாளர்களுக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலகம் அமைக்க வேண்டும். 

மாநிலம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் காணொளி காட்சி என்ற பெயரில் நேரம் காலம் இல்லாமல் ஆய்வு கூட்டம் நடத்துவது வரைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ. பத்து லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சேதுபாவாசத்திரம் பேராவூரணி திருவோணம் மதுக்கூர் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி பாபநாசம் திருவையாறு கும்பகோணம் திருப்பனந்தாள் உள்ளிட்ட 14 ஒன்றியங்களை சேர்ந்த பணியாளர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.