தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த சோகம் ஒருபுறம் என்றால் 7 பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் போலீசில் சிக்கியது மறுபுறம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் சக்திவேல் நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
குளிக்கச்சென்றவரை காணவில்லையே என அவரது குடும்பத்தினர் தேடி வந்து பார்த்தபோது சக்திவேல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. உடன் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு படை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் மற்றும் தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 18ம் தேதி துறையூர் அருகே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றின் கரையோரம் முதியவர் பிணம் ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தாலுகா போலீசாருடன் சக்திவேலின் உறவினர் சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து சக்திவேல் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இது குறித்து சக்திவேலின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பைக்குகள் திருடிய 2 பேர் கைது
தஞ்சாவூரில் 7 பைக்குகளைத் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலம் (53) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வந்தார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இவரது பைக் காணாமல் போனது.
இது குறித்து வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா, உதவி ஆய்வாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் அருகே வரகூரைச் சேர்ந்த ஆதிகேசவன் (21), அரவிந்த் (24) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 7 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சந்திரா, உதவி ஆய்வாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பாராட்டினார்.