பனை விதை சேகரிப்பு மற்றும் நடவு பணிகளை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் எனவும், இவற்றை நடவு செய்ய உகந்த சூழல் ஏறத்தாழ இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பணியில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் பனை மரம் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளின் காவலனாகவும், மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனைமரங்கள் முக்கிய பங்காற்றுகிறது. 



பனைமரங்கள் வளர்ப்பு குறித்து கிரீன் நீடா சுற்றுச்சுழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில்...

 

பனை வெல்லம் ரேசனில் வழங்கப்படும், பனை மரங்களை வெட்டக்கூடாது என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு உரிய நேரத்தில் பனையை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தமிழக முதல்வருக்கு இயற்கை ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கிறோம். பனை மரம் ஒன்றுதான் மழை நீரை நிலத்தடி நீருடன் சேர்க்கும் உன்னதமான பணியை செய்கிறது. இதனை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் நீர்நிலை ஒரங்களில் அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை விதைத்து பாதுகாத்து வந்தனர். கடற்கரை ஒரங்களில் நடப்பட்ட பனைகளால் புயலின் சீற்றம் தணிக்கப்பட்டு நிலப்பரப்பில் காற்றின் வேகம் குறைந்து சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இன்று கடற்கரை ஒரங்களில் பனை இல்லாமலேயே போய்விட்டது. தற்போது பொதுமக்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் பனையை அதிக எண்ணிக்கையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசு சரியாக பயன்படுத்திக்கொண்டு பனையை நட உகந்த மாதமான செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் மரத்திலிருந்து விழுந்த அனைத்து பனை விதைகளையும் சேகரித்து உலர்த்தி உடனே பதியமிட தொடங்கிட வேண்டும். மேலும் பனை விதைகள் அதிக அளவில் இருக்கும் இடங்களில் இருந்து அவற்றை விதைகள் கிடைக்காத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளை வேளாண்துறை மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.



கிராமங்கள்தோறும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து தவிர்க்க முடியாத சூழல் ஆக இருந்தால் பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செயல்படுத்த வேண்டும் இவ்வாறு கிரீன் நீடா சுற்றுச்சுழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.