இரண்டு வருடத்துக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகம்.

 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு  19 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசு மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என அறிவித்த போதிலும், அச்சமின்றி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும், பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வகுப்பறைக்கு 50% மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் பட வேண்டும். கட்டாயம் மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு பள்ளிகளில் முகக்கவசம் வழங்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.



 

பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு விதி முறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் ஒரு வருடத்திற்கான வகுப்பை படிக்காமலேயே அடுத்த வருட படிப்பை படிக்க வருகின்றனர். உதாரணமாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க வருவதால், மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் தயக்கம் மற்றும் அச்சத்தை போக்கும் வகையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த அடிப்படையில் முதல் 45 நாட்களுக்கு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் நடத்தப்படாமல் சிறப்பு பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படும என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.



மூன்றாவது அலை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பரவலாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தங்களது குழந்தைகளை தடுப்பூசிகள் எதுவும் போடாத நிலையில் பள்ளிக்கு அனுப்புவது அச்சமாக உள்ளதாக பெற்றோர்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த 20 மாதங்களுக்கு பிறகு தனது நண்பர்களை சந்திக்கவும் பள்ளிக்கு வருவதாக வருவதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் பாடத் திட்டங்களை முறையாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தங்களுக்கான புத்தாக்க பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளனர்.



 

 

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 169 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் 51 மெட்ரிக் பள்ளிகள் என 220 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதில் இன்றைய தினம் 59,971 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளியில் மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமர வேண்டும், பேருந்துகளில் வருவதை தவிர்த்து விட்டு இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர வேண்டும், மாணவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது உணவினை பரிமாறிக் கொள்ள வேண்டாம், என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அதுமட்டுமன்றி பள்ளிக்குள் நுழையும் பொழுது மாணவர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முக கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணிந்த பின்னரே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிகிழமை மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் முழுவதும் பள்ளிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமை, ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே பள்ளிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.