தஞ்சாவூர்: மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் மண்ணெண்ணெய் விளக்கு ஏந்தி நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


மின் கண்டன உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


தமிழக அரசு தொடர்ந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தவும் முயற்சி நடப்பதாகவும் கூறி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அ.தி.மு.க. சார்பில் மண்எண்ணெய் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. 




கண்டன உரையாற்றினர்


ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், முத்துக்கிருஷ்ணன், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மனோகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கும்பகோணம் கிழக்கு ஒன்றியசெயலாளர் சோழபுரம் அறிவழகன் வரவேற்றார்.


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி மனோகரன் பேசியதாவது: மின் கட்டண உயர்வு அதிகரித்ததை கண்டித்து தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது சரியாக மின் வசதி கிடைக்காமல், மின்தடை இருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது அந்த நிலையை மாற்றி மின்சாரத்தை மக்களுக்கு தேவையான அளவு வழங்கினார். ஆனால் கட்டணத்தை ஏற்றவில்லை. தமிழக மக்கள் 39 தி.மு.க. எம்.பி.க்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளனர். 


வெற்றியின் பரிசாக திமுக கொடுத்த மின் கட்டண உயர்வு


இந்த வெற்றியின் பரிசாக தி.மு.க. மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. விலைவாசிகள் விஷம் போல் ஏறிவிட்டது. எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 நாட்களில் மட்டும் 522 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் இறந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பது இவை அனைத்திற்கும் உதாரணம். தி.மு.க. அரசு பொய்யான காரியங்களை செய்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு மக்கள் இடம் கொடுக்காமல் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சின்னையன், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல செயலாளர் அறிவொளி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, வட்ட செயலாளர் கோவிந்தராஜன், முத்துராஜா, ஹபீப்பாட்ஷா, சரவணன் மற்றும் மாநகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கும்பகோணம் மாநகர செயலாளர் ராமநாதன் செய்திருந்தார். துணை மாவட்ட செயலாளர் தவமணி நன்றி கூறினார்.