தஞ்சாவூர்: தஞ்சாவூர் திலகர் திடலில் வரும் அக்டோபர் 6ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.


தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசினார். விழாவில் ஆயிரத்து 239 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அக்டோபர் 6 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் நடத்துகிறோம். இதில், கருத்தரங்கமும், தமிழக முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடைபெறும். இந்த விழாவில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலராக இருந்த பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


இதில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை விளக்கும் சிறு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அன்று காலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முக சாதனைகள், ஆற்றலை மையப்படுத்தி பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 




இந்த கருத்தரங்கத்தில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, சுப. வீரபாண்டியன், அருள்மொழி மற்றும் பலர் பங்கேற்று பேசுகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வேண்டிய குழுவை நியமித்து ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தொடங்கி வைத்ததை இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.


மேலும், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, எந்தெந்த முறையில் ஜாதி ஒழிப்புக்கும், பெண்ணடிமை ஒழிப்புக்கும், பெண்கள் சமத்துவத்துக்கும், பெண்கள் அதிகாரத்துவத்துக்கும் முயன்றாரோ, அதையெல்லாம் தற்போது திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது.


நீட் ஜீரோ ஆவதற்கு அடையாளமாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது. நீட் நடத்தியும் ஒரு பயனும் இல்லை என்பது தெரிந்துவிட்டது. தனியார் கல்லூரிகள் பயன் பெறுவதற்காகவும், கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்காகவும் நீட் தேர்வு இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. இன்னும் 6 மாதங்களில் ஆட்சியும், காட்சியும் மாறி நீட் தேர்வும் ஜீரோவாகிவிடும். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ. வேலுசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.