தஞ்சாவூர்: படிப்பகம் ஒரு ஊரணி. படிப்பகம் ஒரு சாதாரண விதை அல்ல. அறிவு பண்ணைக்கு ஒரு விதை. அது முளைத்து கிளம்பினால் பெரிய அளவில் அறிவு வளரும் என்று தஞ்சையில் நடந்த பெரியார் படிப்பக திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.


பெரியார் படிப்பகம் திறப்பு விழா


தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி ராஜாஜி நகரில் மறைந்த முன்னாள் எம்பி பரசுராமன் நினைவாக பெரியார் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. கீர்த்தனா மருத்துவமனை டாக்டர் செல்வராசு தலைமை வகித்தார். வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் பட்ட இயக்குனர் புலவர் பொற்கோவன் வரவேற்றார். விஜயலட்சுமி பரசுராமன், நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், அதிமுக மாவட்ட பிரதிநிதி  மாதவராஜ், ஒப்பந்ததாரர் ஜெயராமன், பொதுப்பணித்துறை பொறியாளர் ஓய்வு சேகர், அமிர்தா புத்தக நிலையம் திராவிட செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


குறளின் பெருமை மாணவர்கள் மத்தியில் சென்றடைய பாடுபட்டவர்


நூலகத்தை திராவிட கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மறைந்த பரசுராமன் மனிதநேயமிக்க சிறந்த பண்பாளர். எல்லோரிடத்திலும் இனிமையாக பழகக் கூடியவர். நட்புக்கு உதாரணமாக திகழ்ந்தவர். நீலகிரி ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறளை இலவசமாக வழங்கி குறளின் பெருமையை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சென்றடைய பாடுபட்டவர். படிப்பகம் ஒரு ஊரணி. படிப்பகம் ஒரு சாதாரண விதை அல்ல. அறிவு பண்ணைக்கு ஒரு விதை. அது முளைத்து கிளம்பினால் பெரிய அளவில் அறிவு வளரும். 


பொது தொண்டு ஆற்றுபவர்கள் நேரம் காலம் பார்க்க கூடாது


பொதுத் தொண்டு ஆற்றுபவர்கள் நேரம் காலம் பார்க்கக் கூடாது. அதேபோல் பொது வாழ்க்கையில் மானம் அவமானம் பார்க்கக் கூடாது. படிப்பகங்களுக்கு பல்வேறு கருத்து உடையவர்கள் வருவார்கள். அதில் நல்ல புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். கடந்த காலங்களில் ஒரு சில இடங்களில் படிப்பகங்கள் மட்டுமே காணப்பட்டது.


படிப்பகங்கள் சர்வகலாசாலைகள்
 


தற்போது ஏராளமான படிப்பகங்கள் காணப்படுகிறது. இது அறிவின் வளர்ச்சிக்கு அடையாளமாகும். படிப்பகங்களை சர்வகலாசாலைகள் (பல்கலைக்கழகம்) என்று தந்தை பெரியார் கூறினார். தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி அடைவதற்கு படிப்பகங்கள் தான் முக்கிய காரணம். மறைந்த பரசுராமனின் பெயரால் மிகச்சிறந்த அறிவுச்சுடரை இங்கு ஏற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.


ஏ டு இசட் மருத்துவமனை  நிர்வாகி ராம. பாஸ்கரன், மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் குட்டிமணி ஆகியோர் பேசினர். இதில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் உஷா செந்தில், நீலகிரி ஊராட்சி துணைத்தலைவர் சிங். சரவணன்,  காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வக்கீல் பவித்ரன் பரசுராமன் நன்றி கூறினார்.