தஞ்சாவூர்: இரண்டாவது குருஸ்தலமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் பற்றி தெரியுங்களா? இங்கு மேதா தெட்சிணாமூர்த்தியாக குரு அருள்பாலிக்கிறார்.


700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அமைந்துள்ளது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில். இக்கோயில் 1305 –ம் ஆண்டில் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த சிவன் கோயிலில் 35 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னராலும். பாண்டிய மன்னராலும் சமரசம் செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும்.


கோயிலில் தலவிருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது


இங்கு சோழர் கால, பாண்டியர் கால கல் தூண்கள் இணைந்தே காணப்படுகிறது. காசி புராணத்தில் இக்கோயில் பற்றிய செய்திகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலில் தலவிருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலங்குடியின் பழைய பெயர் கிடாரம் கொண்ட சோழபுரம் என்றும், மற்றொரு பெயர் பேரூர் ஆண்டான் என்றும் அழைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.




குரு தெட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில்


இக்கோயிலில் குரு தெட்சிணாமூர்த்தி தனிக்கோயில் கொண்டு உள்ளார். ரிஷபத்தோடும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளாக முயலகனோடு அருள்பாலிக்கிறார். இவர் மேதா தெட்சிணாமூர்த்தியாக அமைந்திருப்பதால் இரண்டாவது குருஸ்தலமாக விளங்குகிறது. இதை உறுதி செய்யும் பொருட்டு குரு பசுவானுக்கு உரிய தானியமான கடலை ஆலங்குடி தாலுகாவில் பயிரிடப்பட்டு இந்திய அளவில் கடலைக்கு புகழ் பெற்ற வட்டாரமாக திகழ்கிறது.


இங்கு லிங்கோத்பவர் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவுக்கும், ஆஞ்சநேயருக்கும் தனிகோயிலும். அதன் எதிர்புறம் மகாலெட்சுமி சன்னதியும் தனிக்கோயிலாக இருப்பது சிறப்புக்குரியதாகும். இக்கோயிலில் வழிபட்டால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கிய பயன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் சனி பிரதோஷத்தைவிட புதன்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. பிரதோஷ காலத்தில் வழிபடும்போது மகா விஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். புதனுக்கும். சனீஸ்வரனுக்கும் அதிதேவதையாக மகாவிஷ்ணு அமைந்துள்ளதால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி கிரக, புதன் கிரகதோஷங்கள் நீங்கப்பெறுகிறது.


நந்திகேஸ்வரருக்கு எங்கும் காணப்படாத வகையில் நெற்றியில் திருநாமம்


இங்கு உள்ள நந்திகேஸ்வரருக்கும் எங்கும் காணப்படாத வண்ணம் அரிதாக நெற்றியில் திருநாமம் இருப்பதால் இங்கு உள்ள சிவபெருமானுக்கு நாமபுரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. இக்கோயிலில் காலபைரவர், சூரியன், குழந்தை வடிவாக பால சனீஸ்வரர் தனித்தனியாக கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சனி பகவானுடைய தந்தையான சூரிய பகவான் அருகிலும், காலபைரவரும் அருள்பாலித்து வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மூவரையும் வழிபட்டால் அனைத்துவிதமான பலன்களையும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.


மூன்று நிமிடம் சூரிய பகவான் செய்யும் சிவபூஜை


இங்கு மற்றொரு விசேஷம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10-ம் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்குமேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்கின்ற அற்புதகாட்சியை தரிசிக்கலாம். மூன்று நிமிடமே இந்த நிகழ்வை காணலாம். இக்கோயிலில் திருமண நிச்சயதார்த்தம், திருமணங்கள் இறைவன் சன்னிதானத்தில் நடந்து வருகிறது.