இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து திமுகவினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் வரவேற்றார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இரா.தெட்சிணாமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் து.செல்வம்,மகேஷ் கிருஷ்ணசாமி, கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையை பாஜக கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.




மத்திய அரசு நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் நிறுவனத்தில் கட்டாய மொழியாக இந்தியை திணிக்ககூடாது. மத்திய அரசின் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் இந்தியை திணிக்க கூடாது. அலுவலக மொழியாக உள்ள ஆங்கிலமொழியை ஒழிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலக மொழி தொடர்பாக அளித்த அறிக்கையில் அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 




இந்தி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது.