மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 22 பள்ளிகளை சேர்ந்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும்பள்ளி மற்றும் தனியார் பள்ளி பள்ளிகளை சோந்த 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மூன்று பிரிவுகளில் பல்வேறு வயது அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களை சக மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்தனர். இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் உண்டு உறைவிட பள்ளியில் தங்கிப் பயிலும் 11 மாணவர்கள் அனைவரும் பதக்கங்களை வென்றனர். இவர்களில் ஐந்து பேர் தங்கப்பதக்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம், 91 பயனாளிகளுக்கு 18.55 இலட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் கிராம ஊராட்சி திருமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு 18.55 இலட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் வழங்கினர். பாண்டூர் கிராமங்களைச் சுற்றியுள்ள, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடம் கடந்த ஒரு மாத காலமாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
பல்வேறு துறைகளின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நிறைவு நாளில் 91 பயனாளிகளுக்கு 18.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைபட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், பிறப்புச் சான்றிதழ், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நேரில் அங்காடிக்குச் சென்று பொருள் வாங்க இயலாத 6 நபர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ்கள், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 10 நபர்களுக்கு காய்கறி விதைகளும், வேளாண்மை துறையின் சார்பில் 7 நபர்களுக்கு தென்னங்கன்று, ஜிப்சம் போன்ற நெல் நுண் சத்துக்களும் வழங்கப்பட்டன.
இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 96 மனுக்கள் பெறப்பட்டு இன்று 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்கப்ட்டது. மீதமுள்ள 34 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.