அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

 

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்களின் தன்விருப்ப நிதியிலிந்து அரசு பள்ளிகளில் பயிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான விண்ணப்ப கட்டணத்தினை வழங்கினார்.

 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, “திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு  உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக அரசின் சார்பில் இணைய வழிப்பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் 505 மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர் அரசு பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு 63 மாணவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் உதவித்தொகையாக பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1400/- எனவும் பட்டியல் வகுப்பைச் சார்நத மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.800/- வீதமும், ஆகக்கூடுதல் ரூ.75,000/- மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. 



மேலும், இந்தாண்டு நீட் தேர்வானது எதிர்வரும் 12.09.2021 ஞாயிறு மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்க 06.08.2021 கடைசி நாளாகும். மேலும் நம் திருவாரூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், சிதம்பரம், திருச்சி, ஆகிய இடங்களில் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளாகிய நீங்கள் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற பிள்ளைகளாக நீங்கள் திகழ வேண்டும்.

 

அந்தவகையில், இந்த நீட்தேர்வினை எந்தவித தயக்கமின்றி தேர்வில் வெற்றிபெறுவதை  ஒன்றே குறிக்கோளாக கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்றிட வேண்டுமென மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுலவர் சிதம்பரம், மாவட்ட முதன்மை கல்வி அலுலவர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.மணிவண்ணன், நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தினால் அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது ஆகையால் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.