ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி நீக்கம், தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்ய  வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு ஊராக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல், ஊழியர்களின் விளக்கத்தினை கேட்காமல், அதிகாரத்தை பயன்படுத்தி,  தன்னிச்சையாக, முடிவெடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் ஹேமலதா, பணிமேற்பார்வையாளர்கள் திருமாறன், செந்தில்குமார் ஆகியோரின்தற்காலிக பணிநீக்கத்தினையும், கணினி உதவியாளர் சாந்தி பணி நீக்கத்தினையும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.இப்பிரச்சினை தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.




இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கோரிக்கை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதுவரை தற்காலிக பணி நீக்கம், பணி நீக்கம் ரத்து செய்யப்படாத நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்  ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டம் எடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.  இதனால் அன்றாடம் நடைபெறும் பணிகள் தேக்கமடைந்தன. இதில், மாவட்ட கலெக்டரின் எதேச்சதிகாரப் போக்குடன் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களிடம் நடந்து கொள்வதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன. தொடர்ந்து மாலை கூட்டமைப்பு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டத்தினை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராக வளர்ச்சி துறை அனைத்து நிலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல் மாவட்ட கலெக்டர் தனிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழியர்களை அழைத்து உரிய விசாரணை செய்து, உண்மை தன்மையை தெரிந்து கொண்டு, தவறுகள் செய்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, அவரது அதிகார போக்கை காட்டுகின்றது. பலத்த மழையிலும், கஷ்டப்பட்டு, ஆண், பெண்கள் பணியாளர்கள், பணியினை மேற்கொண்டு வரும் போது, உரிய விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். இது போன்ற நடவடிக்கையால், மற்ற பணியாளர்களுக்கும் இது போன்ற நிலை வந்தால், அவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். மாவட்ட கலெக்டர் உடனடியாக தற்காலிகமாக பணி நீக்கத்தை ரத்து செய்யா விட்டால், தொடர் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.