மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான இளைஞர் தினேஷ்குமார். இயற்கை விவசாயியான தினேஷ்குமார், பகுதி நேர பணியாக கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட தமிழர்களின் மரபுக் கலைகளை பயிற்றுவித்து வருகிறார். மேலும் இவர் தனது ஐந்து வயது முதல் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடும் சேவையையும் செய்து வருகிறார்.




இவரது வயலில் விவசாய பணிகள் நடைபெறும் போது அப்பகுதியில் தென்படும் பாம்புகளைக் கண்டு தொழிலாளர்கள் பணியை விட்டு கரையேறுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது இதனைக் கண்ட தினேஷ்குமார்  சிறு வயதில் விளையாட்டாக சாதாரண குச்சியை வைத்து பாம்புகளை அப்புறப்படுத்தி வந்தவர்,  தொடர்ந்து பாம்புகளை பிடித்து மீட்கும் பணியை தற்போது வரை ஒற்றை குச்சியை மட்டுமே கொண்டு செய்து வருகிறார்.




சிறுவயதில் தொடங்கிய பாம்புகளை பிடிக்கும் பணியானது இன்று வரை சேவையாக செய்துவருகிறார். அவரது வயலில் விளையாட்டாக தொடங்கிய பாம்பு பிடிக்கும் செயல் அடுத்தடுத்த தெருக்கள், அடுத்த ஊர்கள் என தற்போது அடுத்த மாவட்டங்கள் வரை பறந்து விரிந்துள்ளது.  சாதாரண தண்ணிப் பாம்பு தொடங்கி சாரை பாம்பு கொம்பேறி மூக்கன், கண்ணாடி விரியன், எண்ணெய் விரியன், கருநாகம், ஜமுக்கால விரியன், நல்ல பாம்பு, கழுதை விரியன் என கொடூர விஷமுடைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விட்டுள்ளார்.




இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் சென்று பாம்புகள் மட்டுமின்றி எந்த உயிரினம் ஆபத்தில் இருந்தாலும் அதனை மீட்டு பாதுகாப்பாக விடும் பணியை சேவையாகவும் தனது கடமையாகவும் செய்து வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் இளைஞர் தினேஷ்குமார். பாம்புகளை பிடித்து அவற்றை வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற இடங்களில் பாதுகாப்பாக விட்டு வருகிறார். தினேஷ்குமாரின் சேவையை பாராட்டிய வனத்துறையினர் பாதுகாப்பாக பணியை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். 




அதேபோல் விலை நிலங்கள் மட்டுமின்றி வீடுகளுக்குள் பாம்புகள்  புகுந்து இருந்தாலும் எந்த நேரத்தில்  அழைத்தாலும் உடனடியாக வந்து பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தி அப்பகுதி மக்களின்  பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறார். மனிதர்களால் பாம்புகளுக்கும் அல்லது பாம்புகளால் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால் பாம்புகளை மீட்கும் பணியை தொய்வின்றி செய்துவருவதாக தெரிவிக்கும் தினேஷ்குமார் மழை காலங்களில் ஒரே நாளில் 60 பாம்புகளை கூட மீட்டுள்ளதாக அச்சரியத்துடன் தெரிவிக்கிறார்.




பாம்புகள் விவசாயிகளின் நண்பன் மேலும் பாம்பு தன்னை தற்காத்து கொள்ளவே கடிக்க முற்படும் அவற்றை பாதுகாப்பாக அப்புறபடுத்த வேண்டும். நமது உணவு சங்கிலியின் ஓர் அங்கம் அவற்றை பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்ககூடாது எனவும் கூறும் தினேஷ்குமார். பாம்புகளின் விஷைத்தன்மை நம்மால் கணிக்க முடியாது அகவே பயிற்சி இன்றியோ விளையாட்டாகவோ பாம்புகளை பிடிக்க ஒருபோது முயற்ச்சிக்க கூடாது எனவும் அறிவுத்துகிறார். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் ஆனால் பாம்புகளின் காவலனான தினேஷ்குமாரை கண்டால் கொடூர பாம்பு கூட பெட்டிபாம்பாய் பாட்டிலில் அடங்கிவிடுகிறது என்றால் அது மிகையாகாது.