திருவாரூரில் பாழடைந்த நிலையில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது கல்வி நிறுவனங்கள் கட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் என்றால் நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற ஆழித்தேர், தியாகராஜா் கோவில்தான். தஞ்சையை அடுத்து விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட மாவட்டம் திருவாரூர் தான். திருவாரூரில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் தான் கண்ணில் படும். இருப்பினும் புதிய, பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே பழைய நீதிமன்ற அலுவலகம் இயங்கி வந்தது. இது ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றமாக இருந்து வந்தது. நகரின் மையப்பகுதியில் இருந்ததால் திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு வழக்குகளில் தீர்வு பெற்று வந்தனர். நகரத்தின் மையப்பகுதியில் இயங்கி வந்ததால் வழக்குகளில் தீர்வு பெற பொதுமக்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் பின்னால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நீதிமன்றம் அந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை நீதிமன்றம் அங்கே தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த பழைய நீதிமன்றம் வளாகம் தற்போது உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் செடி கொடிகள் வளர்ந்து குறுங்காடு போல் காட்சி அளிக்கிறது. நீதிமன்ற கட்டிடங்கள் சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து பாழடைந்த நிலையில் உள்ளது.
இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். சிலர் நீதிமன்ற வளாகத்தில் குப்பைகளை கொட்டி குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகளிவில் காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. மேலும் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள சுவரில் மரம் ஒன்று வளர்ந்து பெரிய அளவில் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளர் ரமேஷ் கூறுகையில்:- சேதமடைந்த நீதிமன்ற கட்டிடம் உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது. சேதம் அடைந்து உரிய பராமரிப்பின்றி குறுங்காடு போல் காட்சியளிக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க உத்தரவிடலாம். எந்த ஒரு உயிரற்ற பொருளாக இருந்தாலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால்தான் அது பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் இருக்கும் பயன்பாடு இல்லாமல் இருந்தால் சேதம் அடைந்து ஆபத்தான நிலைக்கு மாறிவிடும்.
தற்பொழுது மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் நுகர்வோர் ஆணையம் பல்வேறு பிரச்சனைகளில் இன்னல்களில் இருந்து வருகிறது. மேலும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை பராமரிப்பின்றி உள்ள இந்த இடத்திற்கு புதிய கட்டிடமாக அமைத்துக் கொடுத்தால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திருவாரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:- பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் 2013-ம் ஆண்டு வரை பழைய நீதிமன்றம் இருந்தது. அதன் பின்னர்தான் அப்போதுதான் புதிய இடத்திற்கு நீதிமன்றம் மாற்றப்பட்டது. திருவாரூர் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளியோ அல்லது அரசு மகளிர் கல்லூரியில் இல்லை. இதனால் இந்த இடத்தை அரசு சார்பில் இயங்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அல்லது அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வி நிலையங்களை உருவாக்குவதன் காரணமாக கல்வியில் பின் தங்கிய மாவட்டமான திருவாரூர் கல்வியைப் பொருத்தவரை முன்னேற ஏராளமான வாய்ப்பு உள்ளது.