தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழையின் காரணமாக 25 லட்சம் வாழை இலை அறுவடை மழையால் முற்றிலும் முடங்கியது. முகூர்த்த நாள் என்பதால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Continues below advertisement

இந்த பகுதிகளில இருந்து ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக விவசாய பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வாழை இலை அறுவடைகள் முற்றிலும் முடங்கின. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் நேற்று வாழை இலைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதாலும், மழையாலும் வாழை இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் வாழை இலைகள் விலையும் கடுமையாக உயர்ந்தன. வழக்கமாக ஏடு இலை ஒன்று ரூ.2 முதல் ரூ.3 வரையும், நுனி இலை ரூ.3 முதல் 4 வரையும் விற்பனை செய்யப்படும். 

ஆனால் நேற்று ஏடு இலை ரூ.4 முதல் ரூ.5 வரையும், நுனி இலை ரூ.6 முதல் ரூ.7 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு இலை ரூ.2 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் வாழை இலைகள் தினமும் அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நேற்று மழை காரணமாக அறுவடை செய்யப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர். வாழை இலை அறுவடை செய்யப்படாததாலும், முகூர்த்த நாள் என்பதாலும் இலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழைத்தார் விலை குறைந்து விட்டது. கிலோ ரூ.8க்கு விற்பனையானது. மழைக்கு முன்னாடி கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இதனால் வாழை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும். வாழை இலைகளை வெளியூருக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

46 ஆடுகள் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழ கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இயேசு. இவர் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 20 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழை காரணமாக 48 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த 48 ஆடுகளின் மதிப்பு 6 லட்சம் என கூறப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.