தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு கடந்த 15.8.2023 அன்று கூகூர் வடகரை கீழத்தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்(24) என்பவர் ஆடுமேய்க்க சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடை அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.