தஞ்சாவூர்: தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று வைகுண்ட ஏகாததி விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து சென்றார். தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
மேலும் பள்ளியக்ரஹாரம் வீரநரசிம்மர், மணிக்குன்றா பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணிக்குன்ற பெருமாள், நீலமேகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த சொர்க்க வாசல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து 22 நாட்கள் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில், பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது.
இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசன வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசத்தில் 8வது திவ்ய தேசமாகவும், பஞ்சரங்கனின் ஒருவராகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று 10ம் நாள் மோகினி அலங்காரம், இன்று அதிகாலை 4: 55 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், பணியாளர்கள், போலீசார், கிராம மக்கள் மேற்கொண்டு இருந்தனர்.