தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது. மேலும் டெங்கு கொசுக்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு. கலைவாணி  ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யனார் கோயில் 12வது வார்டில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது.


வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு அகிலன் ஏற்பாட்டில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் பாரதி தலைமையில் மருத்துவ குழுவினர் இந்த காய்ச்சல் முகாமை நடத்தினர். முகாமில் காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவ முகாமில் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல், கை, கால் மூட்டுக்கள் வலி போன்றவை இருந்தால் உடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். வீடுகளை சுற்றியும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி இருக்காமலும் பார்த்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


வல்லம் பேரூராட்சித் தலைவர்  செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், 12வார்டு உறுப்பினர் அன்பழகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் டெங்கு தடுப்பு களப்பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் வாட்டர் டேங்குகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பரவலாக கொசு விரட்டும் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.




19- ம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. இப்போது தீவிரமழை தொடங்கும்முன்பே, பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. 


நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.


வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள்,  வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. எனவே வீடுகளிலும், வீட்டை சுற்றியும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.