திருவாரூர் மாவட்டம் மகாராஜபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் வயது 30. இவர் சொந்த கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 13.05.2023 அன்று அன்பழகன் பூந்தோட்டம் அருகிலுள்ள பழைய அரசனாற்று பாலத்தின் அடியில் விழுந்து உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பேரளம் காவல்துறையினர் ஐயப்பனின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். மேலும் பேரளம் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர் இந்த நிலையில் தனது மகன் முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி உறவினர்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில், எனது மகனை அவனது காரில் திருமலைராஜன் ஆற்றுக்கு அழைத்துச் சென்று பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் இருவர் மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என நால்வர் மது வாங்கி கொடுத்து எனது மகனை கொலை செய்திருக்கிறார்கள் என்று தற்போது தெரியவந்து இருக்கிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் என் மகனுடன் மது அருந்திவிட்டு போதையில் ஆடுகின்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ ஆதாரத்துடன் இந்த புகார் மனுவை ஐயப்பனின் தந்தை அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், இந்த கொலைக்கான காரணமாக மகாராஜபுரத்தைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர் மூலம் ஏற்பட்ட பிரச்சினை இருக்கலாம் என்றும் திருமலை ராஜன் ஆற்றில் இருந்த எனது மகனின் கார் பழைய அரசைாற்று பகுதியில் சம்பவம் நடந்த அன்று நின்றதாகவும் தனது மகன் அணிந்திருந்த வெள்ளி கை செயின் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவை பாலத்தின் மேல் பகுதியில் இருந்ததாகவும் அப்போதே தான் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் இது குறித்து தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கொலையில் காவல்துறையைச் சார்ந்த இருவர் சம்பந்தப்பட்டுள்ளதால் பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உறுதி அளித்துள்ளதாக புகார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.