தஞ்சாவூர்: இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார்.


தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற மே 18 தமிழினிப் படுகொலை நாள்  14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினோம். 14 ஆண்டுகள் கடந்தாலும் கூட இனப்படுகொலைக்கு காரணமானவர்களை உலகம் இன்னும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.


ஆனால், இலங்கையில் வாழக்கூடிய சிங்கள மக்களே, இனப்படுகொலை செய்தவர்களை அந்நாட்டை விட்டு விரட்டிவிட்டனர். சிங்கள மக்களுக்கு இருந்த இந்த உணர்வு உலக நாடுகளுக்கு வரவில்லை. எனவே, இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் எங்கே இருந்தாலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்துவதற்கும், தண்டிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா முன்நிற்க வேண்டும்.


உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராஜீவ் காந்தி கொலையில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக தூக்கு தண்டனை விதித்தது. இவர்களில் 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மீதமிருந்த 7 பேரும் இப்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஈழத்தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்த பிறகு, அவர்களைச் சிறப்பு முகாம் என்ற சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது. எனவே, இவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 


முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ. நெடுமாறன் தலைமையில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் அய்யனாபுரம் சி. முருகேசன், துரை. குபேந்திரன், ந.மு. தமிழ்மணி, புலவர் துரை. மதிவாணன், சு. பழனிராஜன், பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் நீதிக் கட்சி சுப. இளவரசன், வழக்குரைஞர்கள் அ. நல்லதுரை, பானுமதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, பேராசிரியர் வி. பாரி வரவேற்றார். நிறைவாக, பொறியாளர் ஜோ. கென்னடி நன்றி கூறினார்.


கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. இப்போரில் இலங்கையில் இருந்த தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மே 18ம் தேதி தமிழினப் படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.