நாகப்பட்டினம்: மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி பைப் லைனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் CPCL ஆலை நிர்வாகம் ஈடுபட கூடாது என்றும் கச்சா எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த நான்கு நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே குழாயின் ஓட்டையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று மீண்டும் சீரமைத்தது. இதனுடைய கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் நான்காவது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்தார். அப்போது மீனவர்களிடம் கூறிய ஆட்சியர், மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஆட்சியர், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன் உடைப்பை சீரமைத்து விட்டதாகவும், மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியதுடன், மாவட்ட நிர்வாகம் அனுமதி இன்றி பைப் லைன்னில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் CPCL நிர்வாகம் ஈடுபட கூடாது என பொது மேலாளர் இடம் கூறி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கச்சா எண்ணெய் கடலில் கலந்து இருப்பதால், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு குறித்தும், கடல் நீர் தன்மை குறித்தும் சென்னையில் இருந்து வரும் தொழில்நுட்ப அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்