தஞ்சை கல்லணைக்கால்வாய் மற்றும் வடவாற்றில் புதிதாக ரூ.6 கோடியில்

  நான்கு பாலம் கட்டப்படுவதை முன்னிட்டு மாற்றுப்பாதையில் வாகனங்களை போக்குவரத்து  இயக்குவது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை  கரந்தை போக்குவரத்து கழக பணிமனை அருகே வடவாறு பாலம் உள்ளது. மிகவும் பழமையான இப்பாலம் குறுகலாகவும், சிதிலமடைந்து, இஸ்திரதன்மை குறைந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதே  போல் தஞ்சை காந்திஜி சாலை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன் பாலமும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியிலும் புதிய பாலம் கட்டப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் ரூ.6 கோடியில் 4 பாலங்கள் கட்டப்படுகிறது.  கல்லணை கால்வாய் பகுதியில் 37 மீட்டர் நீளத்தில் 2 பாலமும், வடவாற்றில் 27 மீட்டர் நீளத்தில் 2 பாலமும் கட்டப்படுகிறது. என பாலங்கள் 4 வழிச்சாலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாலமும் தலா 1.5 கோடியில் கட்டப்படுகிறது. இந்தபாலத்தில் பொதுமக்கள் நடைபாதையும் அமைக்கப்படுகிறது.



தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்படும் இந்த பாலப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாய் தஞ்சை நகரின் மையப்பகுதியிலும், வடவாறு பாலம் உள்ள சாலை தஞ்சை- கும்பகோணம் மெயின் சாலை என்பதால் போக்குவரத்து எப்போதும் நிறைந்து காணப்படும். தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, திருவையாறு, கும்பகோணம் மார்க்கமாக செல்லும் அனைத்தும் வாகனங்களும் சென்று வரும் பிரதான பாலமாக இருப்பதால், இரவு பகல் நேரங்களில் வாகனங்கள் சென்று வரும்.


இந்த வழியாக பாலம் கட்டப்படுவதால் போக்குவரத்துக்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இதனை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



புதிய பாலம் கட்டப்படுவதையொட்டி கும்பகோணம் சாலை மற்றும் திருவையாறு சாலையில் இருந்து  வரும் டவுன்பஸ்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலை, ஏ.ஓய்.ஏ.நாடார் ரோடு வழியாக கொடிமரத்து மூலை அருகே வந்து தஞ்சைக்கு வந்து செல்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


இதே போல் சென்னை மற்றும் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வரும் புறநகர் பஸ்கள் பள்ளியக்ரகாரம் பைபாஸ் ரவுண்டானாவில் இருந்து மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலை வழியாக வந்து தொல்காப்பியர் சதுக்கம் வழியாக தஞ்சை நகருக்குள் வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதே போல் காந்திஜி சாலையில் அண்ணா சிலை அருகில் இருந்து இர்வீன் பாலம் வரை போக்குவரத்து தடைபடும். வாகனங்கள் அனைத்தும் பழைய நீதிமன்ற சாலை, பெரியகோவில், சோழன் சிலை வழியாக வந்து செல்லும்.


இந்த பகுதிகள் வழியாக அதிகாரிகள் வாகனங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதையொட்டி மாநகராட்சிக்குட்பட்ட ஏ.ஓய்.ஏ. நாடார் சாலை மற்றும்  வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் புதிய புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது அதிகாரிகள் தஞ்சை பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் திமுக பெயர் பொறித்த நினைவஞ்சலி பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த ஆணையர் சரவணகுமார், சாலைகளில் பிளக்ஸ் தட்டி வைக்ககூடாது என்ற உத்தரவு உள்ளது. அந்த பிளக்ஸை உடனடியாக அகற்ற கூறுங்கள், இல்லை என்றால் நாங்கள் அகற்றுவோம் என கூறி உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.  இதனை அறிந்த அப்பகுதியினர், உடனடியாக பிளக்ஸ் தட்டியை அகற்றினர்