கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அதன்படி 6 தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



 

இதனையடுத்து நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் புகழ்பெற்ற நாகூர் தர்கா சிங்காரவேலன் ஆலயம் உட்பட  வழிபாட்டுத்தலங்கள் இன்று இரவு 9 முதல் பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 10 மணிக்கு முன்பாகவே வாயில் கதவுகள் மூடப்பட்டது.  நாகூர் ஆண்டவர் தர்காவில் 465 வது கந்தூரி விழா கடந்த 4 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று இரவு 10 மணியுடன் தர்கா  வாயில் கதவு மூடப்பட்டது. இதனால் தர்காவின் உள்ளிருந்த பக்தர்கள் போலீஸார் மற்றும் தர்கா ஊழியர்களால் வெளியேற்றப்பட்டனர். பக்தர்கள் தாமாக வெளியேறுமாறு ஒலிபெருக்கி வழியாக அறிவிப்பும் செய்யப்பட்டது. 



 

பொதுவாக நாகூரில் கந்தூரி நடைபெறும் நாட்களில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், செளதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். ஏராளமானோர் இரவு முழுவதும் தர்காவில் தங்கியிருப்பார்கள்.இந்தாண்டு உலகம் முழுவதையும் அச்சுறுத்தும்  கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாகவும், நாடுகளுக்கிடையான நடைமுறைகளின் காரணமாக வெளிநாட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் வராத நிலையில் ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால் திருவிழா காலத்தில் நாள்தோறும் இரவு பகலாக பக்தர் கூட்டம் நிரம்பிவழியும் தர்காவின் உட்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.



 

அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் தர்கா ஷெரீப்க்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால் நாகூர் ஆண்டவர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம், நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயம், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களில் பக்தர்களை 9 மணி முதலே வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது பெரும்பாலான கடைகள் 8 மணி முதலே அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரும் முகக்கவசம் அணிய நேரடியாகவும் ஒலிபெருக்கி மூலமாக வலியுறுத்தி வருகின்றனர் இதேபோல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளதையும் அறிவுறுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.