தஞ்சாவூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளில் சிஐடியு தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் போக்குவரத்து நகர் கிளை முன்பு ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் சிஐடியு தொழிற்சங்கம் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு அரசு தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் போக்குவரத்து நகர் கிளை முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். மத்திய சங்கத் தலைவர் என்.சேகர் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார். சிஐடியு மூத்த தலைவர் ஆர்.மனோகரன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார். போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு திமுகவின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 1/4/2023 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், போக்குவரத்து கழகங்களில் அனைத்து பிரிவுகளிலும் தனியார் மயநடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த முடிவின்படி சம்பள அரியர்ஸ் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாள் அன்று பணிக்கொடைத் தொகை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெற்று கடந்த 2024 ஜீன் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 30,0000 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், மாவட்ட செயலாளர் த.தாமஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், எச்எம்எஸ் நிர்வாகிகள் மோகன்,சேது, ராஜா, சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ராமசாமி, வி.திருநாவுக்கரசு, ஏஐடியுசி நிர்வாகிகள் டி.சந்திரன் என்.ஆர்.செல்வராஜ், எம்.பி.இளங்கோவன், என்.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏஐடியுசி மத்திய சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.