தஞ்சாவூர்: தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement

இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் உள்ள பெத்லகேம் என்ற இடத்தில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பூமியில் மனிதராக அவர் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Continues below advertisement

தஞ்சை மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக திகழும் தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மறை மாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. முன்னதாக இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் சூசையப்பர், கன்னிமரியாள் வேடமணிந்த இருவர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி வந்து ஆயர் டி.சகாயராஜ் கையில் வழங்கினர். அதை பெற்று கொண்ட ஆயர், அந்த சொரூபத்தை புனிதம் செய்து மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தார்.

அப்போது பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டபோது கிறிஸ்தவர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. முடிவில் குழந்தை இயேசுவின் சொரூப ஆசீர் வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் ஆயர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தையர்கள் அரவிந்த், ஜெனித்லாரன்ஸ், முதன்மைகுரு ஜோசப்ஜெரால்டு, ஆயரின் செயலாளர் ஷெரில் கியூபர்ட் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தின் முன்புறம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வழிபாட்டு கூடாரத்தை ஆயர் புனிதம் செய்து திறந்து வைத்தார்.

இன்று காலை 5.15 மணி, 7.15, 9 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆயர் சகாயராஜ் தலைமையில் நன்றி வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது. தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள கார்மெல் குழந்தை இயேசு திருத்தலத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருத்தல அதிபர் சுரேஷ்குமார் அடிகளார் தலைமையில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. பின்னர் இயேசு பிறப்பை நினைவுகூரும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை கையில் ஏந்தி வந்து மேடையில் இருந்த கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிச்சாமியிடம் வழங்கப்பட்டது.

அதை பெற்று கொண்ட அவர், அந்த சொரூபத்தை புனிதம் செய்தார். பின்னர் அவர், மேடையில் எங்கே பிறப்பார் இயேசு, ரசிகர் மோகத்திலா? சமூக நல தாக்கத்திலா? என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த குடிலில் சொரூபத்தை வைத்தார். தொடர்ந்து அவர், திருப்பலியை நடத்தி, கிறிஸ்துமஸ் செய்திகளை வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சுரேஷ்குமார், துணை அதிபர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், மானம்புச்சாவடி புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.