தஞ்சாவூர்: தமிழகம் இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் இந்தியா கூட்டணி மூலம் மீட்கப்படும் என்று திட்டவட்டமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா, தமிழக முதல்வருக்கான பாராட்டு விழாவில் ஆகியவற்றில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:
தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்லாமல், தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் உயர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவையாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக உயர்ந்து நிற்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும், அதை உள்ளடக்கிய தமிழகமும் இயங்க வேண்டிய முறை.
அத்தகைய கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். இது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை. தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக நீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.
மக்கள்தொகை குறைந்துவிட்டது எனக் கூறி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிற சதியை அரங்கேற்ற பார்க்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க பார்க்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்டச் செல்வதாக பொருள். மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்தை அறிவித்தனர். ஆனால், அந்த அறிவிப்பை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என சொல்வதே, இந்த இட ஒதுக்கீடு நிறைவேறாமல் இருப்பதற்கான தந்திரம். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது பாஜகவின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.
தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுவதும் சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பதுதான் எனக்கு திராவிட கழகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.
ஏதோ சாதித்துவிட்டான், நினைத்ததை முடித்துவிட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல. இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழக முதல்வருக்கு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் விருதை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வழங்கினார். மேலும், வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்வர் வெளியிட, அதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் ஜி. பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் பாராட்டி பேசினர்.
விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.