இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களும் பைபர் இணையவழியால் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 25 கோடி வீடுகள் இணைக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரியல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றிய கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரியல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நேயம், கலாசாரம், நடனம், இசை  போன்றவற்றில் தஞ்சாவூர் தழைத்தோங்கி இருந்தது. பெரியகோயில் தென்னிந்திய கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. கட்டடக்கலை, கட்டுமானம், கட்டமைப்பு துறைகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் மிகச் சிறந்த கட்டடத்தைக் கட்டியுள்ளனர்.

கடற்கரையிலும் நம் மூதாதையர்கள் நினைவு சின்னங்களை எழுப்பியுள்ளனர். ரசாயன தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த வல்லுநர்களாக இருந்துள்ளனர் என்பதை இவை காட்டுகிறது. இந்தியாவின் நெற்களஞ்சியமாகத் வளமான நிலங்களைக் கொண்ட தமிழ்நாடு திகழ்கிறது.

நம் நாட்டைச் சேர்ந்த சுஸ்ருதா, ஆரியபட்டா, பாஸ்கராசார்யா, பிரம்மகுப்தா, சாணக்கியா, பதஞ்சலி, நாகார்ஜூனா, கௌதமா, திருவள்ளுவர் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த உலகத்துக்கு உலகளாவிய அறிவுசார் அமைப்பை உருவாக்கினர். பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் நம் நாடு வளர்ச்சியடைந்திருந்தது.

இந்தியாவின் உணவு பழக்கம், மருத்துவம் உலக அளவில் பின்பற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் யோகா உலகம் முழுவதும் பரவியுள்ளது. தினமும் யோகா பயிற்சி செய்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையில் அனைத்து முறைகளும் உள்ளூர் மொழியை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராட்டி, பஞ்சாபி, இந்தி, ஒடியா என அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் தாய்மொழியில்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாம் எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது. ஆங்கிலத்தைத் தெரிந்து கொள்வதும் தவறல்ல. நமது தாய்மொழியை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே, மத்திய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்றவர்களாக மாணவர்களை உருவாக்குகிறது. தொழில்நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டமும் இதில் ஒன்று. நடப்பாண்டு இறுதிக்குள் தகவல் தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை எட்டும். 2023ம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களும் பைபர் இணையவழியால் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 25 கோடி வீடுகள் இணைக்கப்படும். தெரு வியாபாரிகள், கிராமப்புற வணிகர்கள், ஊரக நுகர்வோர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையைக் கடைப்பிடிக்கின்றனர். இத்திட்டத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. டிஜிட்டல் மயத்தில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 
பின்னர், புளோரிடா பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி, பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோருக்கு கெüரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 72 முனைவர் பட்டதாரிகள் உள்பட 4,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம், டீன் (திட்டம் மற்றும் மேம்பாடு) சுவாமிநாதன் மற்றும் கலந்து கொண்டனர்.