தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் சிவகங்கை மாவட்ட பொருளாளர் முகமது மீரா தலைமையில் நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகமது இப்ராஹிம், முகமது அலி ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பொறுப்பாளர் முகமது மீரான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் பொதுமக்கள் தங்களது உணவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் புழுங்கல் அரிசியினை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த புழுங்கல் அரிசியின் விலை என்பது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் 15 வரையில் உயர்ந்துள்ளது.



 

இதற்கு முழு காரணம் மத்திய அரசு தான் ஆகும். பொதுவாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்து விட்டு பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளனர். ஆனால் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விளைவு உயர்வானது அடுத்து வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ30 வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் இயற்கை சீற்றம் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரித்து விலை உயர்வு அதிகரிப்பதற்கு இந்த மத்திய அரசின் செயல்பாடு வழிவகை செய்துள்ளது. மேலும் தமிழகம் உட்பட மேற்கண்ட 5 மாநிலங்களும் புழுங்கல் அரிசி மட்டுமே அதிக அளவில் உபயோகப்படுத்துவதை அறிந்து கொண்டு இந்த மாநிலங்களை பழிவாங்கும் நோக்கில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்காமல் பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளதன் காரணமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதன் காரணமாக அங்கு பச்சைஅரிசியின் விலையானது குறைந்துள்ளது. 



 

இதன் காரணமாக அந்த மாநில அரசுக்கும் மக்களுக்கும் சலுகைகளை மத்திய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயத்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முகமது மீரான் தெரிவித்துள்ளார்.