தஞ்சாவூர்: தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் மின் கம்பியாள் உதவியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
தொழிற்பிரிவில் தகுதிப் பெற நடத்தப்படும் இரண்டு முக்கிய தேர்வுகளுக்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இத்தேர்வுகளுக்கு உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தேசிய தொழிற் சான்றிதழ் பெற தனித்தேர்வர்களாக எழுத மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு ஆகியவற்றிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026-ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT மூலம் அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 வகையான தொழிற்பிரிவு பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.
முதல் வகை : ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐ-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருடம் பனி அனுபவம் பெற்றவர்கள் அப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை : திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் (COE NTC) பெற்ற பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருந்தால், அப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை : ஆகஸ்ட் 2018 வரை மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் (SCVT) தொழிற்பிரிவு சேர்க்கை பெற்று, ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.
நான்காம் வகை : பிற வகையான விண்ணப்பதாரர்கள். இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.
தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அரசு/ உள்ளாட்சி மன்றத்தில் பதிவு செய்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கும் நபர்கள் தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். முதல் வகை மற்றும் நான்காம் வகை தேர்வர்கள் முதனிலைத் தேர்வுகள் 2 வகையாக நடைபெறும். கருத்தியல் (Theory) தேர்வு வரும் 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறைத் தேர்வு 05.11.1025 என நடைபெறும். கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு நடைபெறும்.
கருத்தியல் தேர்வு விரிவாக எழுதும் வகையில் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் நடைபெறும் அகில இந்திய தொழிற் தேர்விற்கு தனித்தேர்வர்களாக எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெல்லி DGT மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) அனுப்பப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 https://www.karuvoolam.tn.gov.in/ இணைப்பில் வழியாகவோ அல்லது எஸ்பிஐ வங்கி கருவூலக் கிளையின் வழியாகவோ செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 37 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த விவரத்துடன், கல்வித்தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி, தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல்வர்களிடம் நேரடியாக 08.10.2025 தேதிக்குள் வழங்க வேண்டும்.