தஞ்சாவூர்: மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.‌ இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு ஆதரவும், அதிருப்தியும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்துள்ளது. இந்த பட்ஜெட் பற்றி தஞ்சை விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜீவகுமார்: தமிழகத்திற்கு  தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது ஏமாற்றம் அளிக்கிறது. பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்குவதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.


சமூக ஆர்வலர் ராமதாசு: 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில்கள் பெட்டிகள் தரத்தில் புதுப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மாநில வளர்ச்சிக்கு வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் பெரும்பாலானவை பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.


ஜீவரத்தினம்: மத்திய பட்ஜெட்டில் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படாதது நல்ல விஷயம். சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆன்மீக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். 




சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா: நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜ் மையங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பால் மின்சார வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற திட்டத்தால் விவசாயிகள் பயனடைவர். தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு புதிய ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 


விவசாயி கரம்பை குமார்: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எதுவும் இல்லை. முக்கியமாக விவசாயிகள் நலன் கருதி நெல் உலர்த்தும் களம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.