தஞ்சாவூர் மாவட்டத்தில் 44 இடங்களில் 4 ஜி சேவைகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான முதலாவது தொலைபேசி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் உள்ள பகுதிகளில் 4ஜி சேவை வழங்கி பி.எஸ்.என்.எல். வணிகத்தைப் பெருக்க வேண்டும். பட்டுக்கோட்டை சாலையில் உளூர் பகுதியிலும், மன்னார்குடி சாலையில் நெய்வாசல் பகுதியிலும் செல்போன் சிக்னல்களை மேம்படுத்த வேண்டும். உளூர் கிழக்கு கிராமத்துக்கு யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 4 ஜி கோபுரத்தை வாண்டையார்இருப்பு, உளூர் மேற்கு பகுதிகளுக்கும் சேவை கிடைக்கும் வகையில் பொதுவான இடத்தில் அமைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் பொது மேலாளர் பால. சந்திரசேனா பேசுகையில், தஞ்சாவூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 44 இடங்களில் 4ஜி சேவைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. உளூர் கிழக்கு, விரயன்கோட்டை கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் 4ஜி சேவைகள் வழங்கப்படவுள்ளன என்றார் அவர். தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பி.எஸ்.என்.எல். துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) எஸ். ராஜகுமார் வரவேற்றார். நிறைவாக, துணைப் பொது மேலாளர் (திட்டம்) எஸ். சிவசங்கரன் நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டத்தில் 4ஜி சேவைகள் வழங்க மும்முரமாக செயல்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்
என்.நாகராஜன் | 15 Sep 2022 06:08 PM (IST)
தஞ்சை மாவட்டத்தில் 44 இடங்களில் 4ஜி சேவைகள் வழங்க பணிகள் மும்முரம்: பி.எஸ்.என்.எல். தஞ்சை பொது மேலாளர் தகவல்
பி.எஸ்.என்.எல்
Published at: 15 Sep 2022 06:08 PM (IST)