பயிர் பாதுகாப்பில் இனக்கவர்ச்சி பொறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இனகவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி பூச்சிகளை கண்காணிப்பது கவர்ந்து இழுப்பது முக்கியமான ஒன்றாகும். இன கவர்ச்சி என்ற தத்துவத்தின் மூலம் செயல்படுவதே இந்த பயிர் பாதுகாப்பு முறையாகும் என்று பூதலூர் வேளாண் உதவி இயக்குனர் ராதா விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி பொறிகளின் தத்துவம்:
ஒரு இனத்தை சேர்ந்த பெண் தாய் அந்து பூச்சியானது அதை இனத்தை சேர்ந்த எதிர் பாலின அந்து பூச்சியை கவர்ந்து இழுக்க ஒரு வித வாசனை பொருட்களை தன் உடலில் சுரந்து காற்றில் வெளிவிடுகின்றன. இது இன கவர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படுகிறது. அதை இனத்தை சேர்ந்த ஆண் பூச்சியில் மட்டுமே இதனை உணர முடியும். இவ்வாறு கவரப்பட்ட ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைத் தேடிச் சென்று புணர்வதால் பெண் பூச்சிகள் முட்டை இட்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றன. இந்த முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இவ்வாறு முட்டையிடுவதற்கு முன் இன விருத்தியை தடுக்கவே இன கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இன கவர்ச்சி ஊக்கிகளை செயற்கை முறையில் தயாரிக்க அதன் வேதியல் குறியீடுகளை கண்டறிய பயன்படுகிறது. இந்த வேதியல் குறியீடுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊக்கிகளை ரப்பர் குமிழ்களில் சேர்க்கப்பட்டு பின்பு வயலில் வைத்து பூச்சிகளை கவர்ந்த அழிக்க வழி வகுக்கப்படுகின்றது.
இனக்கவர்ச்சி பொறிகளின் வகைகள்:
1. குழாய் போன்ற நீண்ட பாலின பைகள் கொண்ட பொறி
2. வட்ட வடிவ தண்ணீர் நிரப்பும் பொறி
3.முக்கோண வடிவ அட்டைப்பெட்டி பொறி
இவை அதிகமாக பயன்படுத்தும் வகைகள் ஆகும். இதனை தவிர பழ ஈக்கள், காண்டாமிருக வண்டுகளை கவர்ந்திழுக்க வேறு விதமான பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக தயாரிக்கப்பட்ட இன கவர்ச்சி ஊக்கி கொண்ட ரப்பர் குமிழ்களை இப்பொறியினுள் அதற்கான இடத்தில் பொருத்தி வயலில் பயிர் மட்டத்திற்கு சற்று மேலே இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த அமைப்பை கம்பு அல்லது கழியை கொண்டு உறுதியாகக் கட்டி காற்றில் ஆடாதவாறு பாதுகாக்க வேண்டும். ரப்பர் குமிழில் உள்ள ரசாயன கவர்ச்சி ஊக்கிகள் வயலில் பரவி ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த ஆண் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இதனை நாடி இரவு நேரங்களில் வரும் பூச்சிகள் நீளமான பாலிதீன் பைகளில் விழுந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொள்ளும். வட்ட வடிவ தண்ணி நிரப்பும் பொறிகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்எண்ணையை கலந்து வைத்து விட்டால் அதில் அந்து பூச்சிகள் விழுந்து இறந்து விடும்.
இன கவர்ச்சி பொறிகளை ஒரு எக்டேருக்கு 10 -12 எண்ணிக்கைகள் வரை வைக்க வேண்டும். ஒரு பொறிக்கும் மற்றொரு பொறிக்கும் இடையே சுமார் 30 - 40 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சராசரியாக தினமும் 3-4 பூச்சிகள் வரை ஒரு பொறியில் மாட்டிக் கொள்ளும். பூச்சிகளின் எண்ணிக்கை பொறியில் விழும் அளவைப் பொறுத்து அதன் சேதம், அப்பூச்சி நடமாட்டத்தை கண்டறியலாம். ஆண் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்படுவதால் பெண் பூச்சி முட்டையிடுவது தடுக்கப்பட்டு சுமார் 200 -300 புழுக்கள் பயிர்க்கு ஏற்படுத்தும் சேதத்தை தவிர்க்கலாம்.
21 நாட்களுக்குப் பிறகு மாற்றி விட்டு புதிய ரப்பர் குமிழ்களை வைக்க வேண்டும்.
பாலிதீன் பைகளின் வாய்ப்பகுதியை திறந்தே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கவரப்படும் பூச்சிகள் அதில் விழாமல் பறந்து விடும்.
நன்மைகள்: இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதில்லை. இம்முறையை பயன்படுத்துவதால் பூச்சி மேலாண்மைக்கான செலவு குறைகிறது. பூச்சிகள் முட்டையிடுவதற்கு முன்பே அளிக்கப்படுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை காய்கறி பயிர்களுக்கு தெளிப்பதை குறைக்க இயலும். மற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளுடன் சேர்ந்து பயன்படுத்துவதற்கு ஏதுவானது.