நாகை துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சத அலை படகை பதம் பார்த்துள்ளது. இதில் படகு அடியின் உள்ளே ஓட்டை விழுந்ததால், கடல் நீர் படகில் உள்ளே குபு குபுவென புகுந்துள்ளது. இதில் படகு முழுவதும் கடல் நீர் புகுந்ததால், விசைப்படகு திடீரென நடுக்கடலில் மூழ்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நான்கு பேரும் கடலில் குதித்து உயிரை காப்பாற்றிக் கொள்ள கரை நீந்த தொடங்கினர். அப்போது அவ்வழியே மற்றொரு படகில் வந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானபிரகாசம் ராஜகுமார் செண்பகம் மனோ ஆகிய நான்கு பேரை மீட்டு கரை சேர்த்தனர். இந்த விபத்தில், 25, லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் இஞ்சின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால், மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 




 

நாகை அருகே குடிநெய்வேலி, நரியங்குடி, கருவேலி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய குருவை பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை: பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.



 

 

 

நாகை மாவட்டம் பாப்பா கோயில் ஊராட்சி குடிநெய்வேலி, நரியங்குடி, கருவேலி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்துள்ளனர். கோ 51 ரக நெல்லை நடவு மற்றும் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது 80 நாட்களில் இருந்து 90 நாட்கள் வளர்ந்த பயிர்கள் கதிர் விட்டு முற்றும் தருவாயில் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் உள்ள பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் 100 மூட்டை அறுவடை செய்ய வேண்டிய விளைநிலத்தில் பன்றிகளின் பாதிப்பினால் தற்போது 25 அல்லது 30 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 



 

 

மேலும் கடந்த ஆண்டு பயிர் பாதிப்பினால் அப்போது வாங்கிய கடனில் இருந்து மீளாத நிலையில் மீண்டும் கடன் பெற்று ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் செலவு செய்துள்ளதாகவும் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் பண்றிகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பன்றிகளை பிடிக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் இப்பகுதி விவசாயிகள் வனத்துறை அல்லது தனியார் மூலம் உடனடியாக பன்றிகளை பிடித்து விவசாய நிலத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் அல்லது நான்கு கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.