நாகை அருகே காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு 16 வயதான சிறுவன் சாராயம் கடத்தி சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு பைக்கில் மோதி தீ பிடித்து எறிந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராயம் கடத்தி வந்த நபர் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, பின்னர் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் மதுக்கடைகள் திறக்க தொடர்ந்து அனுமதி வழங்கப்படவில்லை, இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக கண்டறியப்பட்ட 27 மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், உட்பட 11 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று குறையாத காரணத்தால் மதுக்கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை.

 

இந்த நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மது கடத்தல் வழக்குகளில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு பல ஆயிரம் லிட்டர் மதுபான வகைகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வந்தன. தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பலரும் மதுபான பாட்டில்களை கடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழக பகுதியான நாகை மாவட்டத்திற்கு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சாராய மூட்டைகள் கடத்தி செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது. நாகூரை சேர்ந்த ஒரு சில காவலர்களின் துணையோடு இந்த சாராய கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது, விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நாகூர் காவல் சரகதிற்கு உட்பட்ட நரிமணம் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகளை கடத்தி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மற்றொரு பைக்கில் மோதி ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



நாகூர் அருகே கொட்டாரக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யதுமுகமது(26). இவர் தனக்கு சொந்தமான பைக்கில் நரிமணம் கிராமத்திலிருந்து கொட்டாரக்குடி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்தவர்கள் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் செய்யது முகம்மது தூக்கி வீசப்பட்டதை தொடர்ந்து, சாராய மூட்டைகளில் தீப்பொறி பட்டு இரண்டு பைக்குகளும் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பின்னர் நாகூர் போலிசார் நடத்திய விசாரணையில் நாகை அருகே பெருங்கடம்பனூர் புளியந்தோப்பு தெருவைச் சேர்ந்த அபினேஷ் என்ற 16 வயது சிறுவன் சாராய கடத்தலில் ஈடுபட்டதும், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் இருந்து புதுச்சேரி மாநில சாராய மூட்டைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் விபத்தில் சாராய மூட்டைகள் சிதறி விழுந்ததில் இரண்டு பைக்குகள்  தீப்பிடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் அபினேஷ் 75 சதவீத தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதனிடையே தப்பியோடிய சாராய கடத்தலில் ஈடுபட்ட அபினேஷ் உடன் வந்த மற்றொரு நபரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சாராயம் உள்ளிட்ட மதுபாட்டில்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல்துறையினர், பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என பொதுமக்கள் இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.