நீண்டகாலத்திற்கு பிறகு மேட்டூரி அணையில் இருந்து உரிய காலத்தில் காவிரி தண்ணீர் கிடைத்ததால்  நடப்பாண்டில் காரைக்கால் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.  சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நன்கு விளைந்து கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை எங்கு சென்று விற்பதென தெரியாமல் காரைக்கால் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மழை,வெள்ளமென மாறி,மாறி வந்த இயற்கை இடர்பாடுகளை கடந்து கஷ்டப்பட்டு விளைவிக்கப்பட்ட நெல்லை விற்க வழியின்றி காரைக்கால் விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.   

 



 

காரைக்காலை அடுத்துள்ள நெடுங்காடு பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெல்லை,  அறுவடை செய்தால் வெளியில் சென்று விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக காரைக்காலில் விளைவிக்கப்படும் நெல்லை  தமிழக பகுதிகளில் சென்று விற்பனை செய்வது வழக்கம். அங்குள்ள டி.என்.பி.சி-யில் நெல்லை விற்பனை செய்தால்  காரைக்கால் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.  காலப்போக்கில் இந்நிலை மாறி இடைத்தரகர்களிடம் சொற்ப விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை காரைக்கால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வந்தது.



 

இதனால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நெல்லை தமிழக பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்துவந்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை விட வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்ற போதிலும் வேறு வழியின்றி இம்முறையில் நெல் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தாண்டு  சிட்டா மற்றும் அடங்கல் இன்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காரைக்கால் நெல் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அதை எடுத்து வருபவர்கள் மீது தமிழக அரசால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட விருப்பதாகவும் குண்டர் சட்டம் போட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருப்பது காரைக்கால் விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 



 

இதையடுத்து நெடுங்காடு விவசாயிகள் நல சங்கம் சார்பாக அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் காரைக்கால் பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை காரைக்காலிலேயே கொள்முதல் செய்ய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் , மத்திய அரசின் கொள்முதல் நிலையம் மூலமாக அடுத்த ஓரிரு வாரங்களில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற விவசாயிகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள்ளாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாவிட்டால்  அடுத்த கட்டமாக  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து பெரிய அளவிலான பந்த் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.