தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பயன்படுத்தப்படும் தொன்னை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள, நரபலிஅம்மன் கோயில் தெருவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொன்னை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


100 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜபுரத்தை சேர்ந்த ராசுஅய்யர் என்பவர், திதி கொடுப்பதற்காக தேவைப்படும் பல்வேறு பொருட்களை வைப்பதற்காக தொன்னையை உருவாகி உள்ளார். பின்னர், தொன்னையில், பிரசாதங்களை வைத்து, பக்தர்களுக்கு வழங்கினால், கெடுதல் இல்லை என்றும், மனம் மாறாமல், உணவு பொருள் கிடைக்கும் என்று தொன்னையை தயாரித்தார்.  


அதன் பிறகு அவரது மகன் குஞ்சுஅய்யர், தொன்னை தயாரித்தார். அவர்களது வீட்டிற்கு சென்று, எங்களது மூதாதையர்கள், தொன்னை தயாரிக்கும் தொழிலை கற்று கொண்டனர். நாளடைவில், 96 வயதுடைய குஞ்சுய்யர், தொன்னையை தயாரித்து வந்தாலும், அவரது குடும்பத்தால், எங்கள் பகுதியிலுள்ள அனைத்து குடும்பங்களும் தொன்னை தயாரித்து விற்பனை செய்து எங்களது வாழ்வாதரத்தை பெருக்கியுள்ளோம். தியாகராஜபுரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாழை இலை சருகு தொன்னைகள் பார்ப்பதற்கு கிண்ணம் போல் அழகாகவும், உணவு பொருட்கள் ஒழுகாத வகையில், நன்றாக வெயிலில் உலர்த்தி, இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.



இத்தகைய புகழ்பெற்ற வாழை சருகினாலான தொன்னை, கர்நாடகா, ஆந்திரா, திருப்பதி, பழனி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கு அனுப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணத்தால்,  தற்போது 50 சதவீதம் பேர், மாற்று தொழிலுக்கும், வேலை தேடி திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் தொன்னை தயாரிக்கும் தொழிலை விட்டு சென்று விட்டனர் 


தொன்னை தயாரிக்கும் தொழிலை தவிர, வேறு மாற்று தொழில் தெரியாத முதியவர்கள், பெண்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிசைத் தொழிலாக தொன்னை தொழிலை செய்து வருகின்றனர்.
இங்கு தயாரிக்கும் தொன்னையானது காயவைத்த வாழை சருகினை, வாங்கி வந்து, தண்ணீரில் ஊறவைத்து, பின்னர், அதன் தனித்தனி சருகாக பிரித்து, பெரிய மற்றும் சின்னதாக கத்தரித்து, தொடர்ந்து அதனை கிண்ணம் வடிவத்தி்ல் வைத்து, தென்னை குச்சியை கொண்டு தைப்பார்கள்.
ஒரு இலைக்கு இரண்டு தொன்னை செய்யலாம். ஒருநாளைக்கு ஒருவர் சுமார் 2 ஆயிரம் தொன்னைகள் வரை தயார் செய்யலாம்.



இதனை தொடர்ந்து தொன்னையை வெயிலில் உலர்த்தி நன்றாக காயவைத்த பின், கோயில்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இங்கு தயாரிக்கும் தொன்னைகள் சிங்கப்பூர், குஜராத், திருப்பதி, பழனி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. தமிழகத்திலேயே தியாகராஜபுரத்தில் மட்டும் தான் வாழை சருகினாலான தொன்னை தயாரிக்கப்படுவது சிறப்பாகும். இந்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலால் செய்யப்பட்ட கப்புகள், கோயிலில் பிரசாதங்கள் வழங்க பயன்படுத்தப்பட்டதால் தொன்னைகள் பயன்பாடு வெகுவாக குறைந்தது.


ஒரு காலத்தில் தொன்னை தயாரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து, வீட்டிலுள்ள பெண் குழந்தைகளுக்கு தடபுடலாக திருமணம் செய்து வைத்துள்ளோம். ஆனால் தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமமாகியுள்னர். தொன்னைக்கு தேவைப்படும் வாழை இலை சருகுகள், ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்திலேயே கிடைத்தது. ஆனால் தற்போது கடலுார் மாவட்டத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. ஒரு கட்டு சருகினை 180 ரூபாய்க்கு வாங்கி வந்து, அதனை பதப்படுத்தி, நறுக்கி, இரண்டு வகையாக தயாரித்து, பின்னர் வெயிலில் ஊலர்த்தி நன்றாக காயவைத்து விற்பனைக்கும், கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.


 



ஈரமாக உள்ள தொன்னையை விற்பனை செய்தால், அதில் உணவு பொருள் வைத்தாலோ அல்லது தொன்னையோ சில நாட்களில் வீணாகி விடும். நன்றாக உலரத்திய பின், உணவு பொருளை வைத்தால், ருசி மாறாமல், சுடு குறையாமல், இயற்கையுடன் தரமான உணவு கிடைக்கும். அதனால் தான் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும், தொன்னையை பயன்படுத்துகின்றனர்.



தற்போது 100 தொன்னை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை சென்னை, கோவை, போன்ற பெருநகரங்களில் உள்ள பெரு வணிகர்கள், எங்களிடமிருந்து லாரியில் ஏற்றி கொண்டு சென்று, மற்ற மாநில மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.
ஒரு மூட்டைக்கு 5 ஆயிரம் தொன்னைகள் என தினந்தோறும் 10 மூட்டைக்கு, 50 ஆயிரம் தொன்னைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தற்போது விற்பனைக்கு வரும் பாக்கு மட்டை தட்டு, தர்மாகூல், பிளாஸ்டிக் கப்புகளில், சூடாக உணவு பொருட்களை வைத்தால், ஒரு விதமான வாடை வீசும், ஆனால் தொன்னையில்,சூடான உணவு பொருளை வைத்தால் வாடை வராது. வாழைத் தொன்னையில் உணவிட்டுச் சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு, உடல் சூட்டையும் சமப்படுத்தும்.


கடந்த காலங்களில் குஜராத் மாநிலத்திலுள்ள கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, தியாகராஜபுரத்திலிருந்து மாதந்தோறும் ஒரு ரயில் வேகன் முழுவதும், தொன்னை அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு பொருட்களின் வருகையால், தற்போது நிறுத்தப்பட்டது. நெய்யிக்கு தொன்னை ஆதரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்பது பழமொழி. அதாவது, தொன்னையில் நெய்யை எடுத்து சென்றால், அவ்வளவு ருசியாகவும், மனமாறாமல் இருக்கும். அந்த நெய்யை உணவில் சேர்த்து கொண்டு சாப்பிட்டால் அந்த உணவின் ருசிதனியாக இருக்கும்.



ஆனால் கொரோனா தொற்று காரணத்தால் தொன்னை தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விட்டது. கொரோனா தொற்றால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. சுபகாரியங்கள் நடைபெறாததால், தொன்னை தொழிலில் ஈடுபட்ட வந்த பெருபாலானோர், மாற்று தொழிலுக்கு வெளி மாவட்டத்திற்கு சென்று விட்டனர். எனவே, தமிழக அரசு, பிளாஸ்டிக் மற்றும் தர்மாகூல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும். கோயில்கள் மட்டுமில்லாமல், ரயில்வே நிலையம், பஸ் நிலையம், வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்கும், உணவு பொருட்களை வைப்பதற்கு தொன்னையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.


தொன்னை தொழிலாளர்களுக்கு,  வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும், தொன்னையை அரசே கொள் முதல் செய்து, கோயில்களுக்கு வழங்க வேண்டும், இடைத்தரகர்கள் இல்லாமல், நேரிடையாக தொன்னை தயாரிப்பவர்களிடமே, தொன்னையை கொள் முதல் செய்து கொள்ள உத்தரவிட வேண்டும் என தொன்னை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.