தஞ்சையில் குப்பை தரம் பிரிப்பு, தூய்மையான நகரை உருவாக்குவது குறித்து தஞ்சை மாநகராட்சியில் ரஷ்ய கலைஞர்களின் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலே நடனம் மற்றும் பாரம்பரிய நடனம் ஆடியவர்கள் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு செம ஆட்டம் போட்டு கலக்கினர். முன்னதாக அவர்கள் தஞ்சை பெரிய கோவிலையும் பார்த்து வியந்தனர்.



தஞ்சை மாநகராட்சியில் ரஷ்ய கலாசார விழிப்புணர்வு குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பது, தூய்மையான நகராக உருவாக்குவது குறித்து அவர்கள் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் ரஷ்ய நாட்டை சேர்ந்த 15 கலைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனமான பாலே நடனம் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் பாரம்பரிய நடனம் ஆகிய நடனங்களை ஆடினர். மேலும் தமிழகத்தில் தற்போது வெளியாகி உள்ள வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கும் செம நடனம் ஆடினர். இதனை பொதுமக்கள் கண்டு வியந்தனர். தாளம் தப்பாமல் தமிழ் பாடலுக்கு ஆடி அசத்தினர்.

பின்னர் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பையின் உபயோகம் குறித்தும், குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கலைஞர்களை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.





பின்னர் ரஷ்ய கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான இலியானா கூறுகையில், “இந்தியா- ரஷ்யா வர்த்தக சபை அழைப்பின் பேரில் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா வந்து கலை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். கடந்த 12-ந்தேதி தமிழகம் வந்தோம். தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம்.

தஞ்சைக்கும் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளோம். தஞ்சை மாநகராட்சியில் கலை நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தி உள்ளோம். இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது நடன கலைஞர்களை அழைத்து வருகிறோம். தற்போது இடம்பெற்றுள்ள கலைஞர்களில் 13 பேர் புதிதாக வந்தவர்கள் ஆவர்.

எங்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தஞ்சை மாநகராட்சி அழகாக உள்ளது. சுற்றுப்புற சூழல் மிகவும் நன்றாக உள்ளது. இதனை விவரிக்க வார்த்தை இல்லை. காலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கும் சென்று பார்த்து வியந்தோம்”என்றார். இந்த குழுவினருடன் மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.