தஞ்சையில் பிளஸ் - 2 மாணவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மூன்று சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், ஒருவர் தஞ்சாவூர் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்களின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் வழக்கம்போல் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். இதை நோட்டமிட்டு 2 பைக்குகளில் வெளியில் காத்திருந்த சிலர் பள்ளி மாணவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதுடன், அவரை மிரட்டி பைக்கில ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பார்த்தபோது அடையாளம் தெரியாத சிலர் பிளஸ்-2 மாணவரை தாக்கி பைக்கில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தஞ்சை நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு முன்பு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் குவிந்து கதறி அழ ஆரம்பித்தனர். மேலும் சாலைமறியலும் செய்ய முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பினார். பின்னர் போலீசார் கடத்தப்பட்ட மாணவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவருக்கும், தஞ்சை அரசு கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர், அந்த கல்லூரி மாணவரை தனது சக நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்குப் பழிக்குப் பழியாக வாங்குவதற்காக கல்லூரி மாணவர் தனது சக நண்பர்களை அழைத்து கொண்டு பள்ளி மாணவரை தாக்கி பைக்கில் கடத்திச் சென்று பின்னர் வீட்டின் அருகில் இறக்கி விட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தஞ்சை செண்பக புரத்தை சேர்ந்த 17 வயது அரசு கல்லூரி மாணவர், தஞ்சை மனோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினைவேல் (19), பிள்ளையார்பட்டி சேர்ந்த 16 வயது சிறுவன், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பள்ளி மாணவரை கடத்திச் சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசார் மூன்று சிறுவர்கள் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். இதில் சிறுவர்கள் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், வினைவேல் தஞ்சாவூர் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டார். சினிமாவில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவரை கடத்தியவர்கள் இருசக்கர வாகனத்தை மாற்றி மாற்றி அந்த மாணவரை கடத்தி சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.