தஞ்சாவூர்: மின்சாரபேருந்துகள், மினி பேருந்துகள், பணியாளர்களை தனியாரிடம் கொடுத்த தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து கழகங்களையும் கண்டித்து ஏஐடியூசி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏஐடியுசி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேருந்துகள் மற்றும் பணியாளர்களை தனியாரிடம் கொடுத்த தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து கழககளையும் கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சாவூர் ஜெபமாலை புரம் போக்குவரத்து பணிமனை முன்பு  நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்கத் தலைவர் என்.சேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கௌரவத் தலைவர்     கே.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, சிஐடியூ மத்திய சங்க துணைத் தலைவர் எஸ்.ராமசாமி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், ஆகியோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு புதிதாக வாங்கப்பட்ட மின்சார பேருந்துகளை சென்னையில் தனியாருக்கு அளித்தது, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க தாராள அனுமதி வழங்கியது. ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போக்குவரத்து கழகத்தை படிப்படியாக தனியார் மயமாக்கி வரும் தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து கழகங்களையும் போக்குவரத்து                  ஏஐடியூசி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த தனியார் மய நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமே அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும், 

ஆட்சி முடியும் நேரத்தில் தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கழக ஓய்வூதிய திட்டத்தில் 1.4.23 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் இணைக்க வேண்டும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை 2023 முதல் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இன்னும் வழங்கப்படாதது உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி முழுமையான அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அவ்வப்போது உயருகின்ற அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், மேல் முறையீட்டு மனுக்களில் பாரபட்சமின்றி தண்டனைகளை பரிசீலித்து குறைக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் டி.சந்திரன், என்ஆர்.செல்வராஜ், என்.ராஜேஸ்கண்ணன், எம்.தமிழ்மன்னன், பி.முருகவேல், கே.சுகுமார், எம்.பி.இளங்கோவன், டி.சீனிவாசதினேஷ், சி.வேம்பையன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் எ.சுப்பிரமணியன், டி.தங்கராஜ், எம்.மனோகரன், ஆர்.ரவீந்திரன், அ.இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார். முன்னதாக ஆர்ப்பாட்டம் தொடங்கும் பொழுது கல்வியாளர் பேராசிரியர் வே.வசந்தி தேவி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபி சோரன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது