கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் குழு இன்று முன்னதாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இரவு மயிலாடுதுறை மாவட்டம் வருகை புரிந்த அமைச்சர்கள் குழு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன் அடங்கிய இருளில் சாலையில் நின்றவாறு நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு முறையாக தூர்வாரும் பணியை மேற்கொள்ளாததால் தற்போது மழை வெள்ள பாதிப்பிற்கு தமிழக மக்கள் உள்ளாகியுள்ளனர். ஆறுகள், குளங்கள் தூர் வாராமல் கடந்த அதிமுக அரசு விளம்பரத்தை மட்டும் தேடி கொண்டனர். சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரம் பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மழையால் பாதித்த பயிர்கள் குறித்து உரிய முறையில் வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம் என்றார்.
மேலும் இந்த ஆய்வு குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் விவசாய பாதிப்புகளை ஆய்வு செய்த வந்த அமைச்சர்கள் இரவு வேளையில் இருளில் வந்து பாதிப்பை நெடுஞ்சாலையில் நின்று கொண்டு எவ்வாறு கண்டறிய முடியும், விவசாயிகளின் வேதனையை புரிந்து கொள்ளாமல் பெயரளவில் மட்டுமே இந்த ஆய்வு நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.