சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 555 பேர் கைது செய்யப்பட்டனர்.



சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் ரயில் நிலையம் அருகில் முன்னாள் மாவட்டச்செயலாளர் துரை.திருஞானம் தலைமை வகித்தார். இதில் சாலை மறியல் செய்த 75 பேரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஒன்றியச்செயலாளர் க. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 பேரை போலீஸார் கைது செய்தனர். பாபநாசத்தில் மேற்கு ஒன்றியச்செயலாளர் கோபிநாதன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாச்சியார்கோயிலில் தெற்கு ஒன்றியச்செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். பேராவூரணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு மற்றும் மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 80 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் பூதலுாரில் முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர், பந்தநல்லுாரில் முன்னாள் எம்.பி., பாரதி மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்ற  சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 555 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டங்களால் மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி நேரம் என்பதால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்தனர். அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.