தஞ்சாவூர்: 2025-2026 ம் ஆண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்கு தஞ்சை மாவட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2025 -2026ம் ஆண்டுக்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு பேசியதாவது: சிறப்பு தூர்வாரும் பணிக்கான ஆலோசனை கூட்டத்தினை முன்கூட்டியே தொடங்கி, விவசாயிகளின் கருத்துகளை கேட்டமைக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர் வாரும் பணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் சுமார் ரூ.20 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதி போதாது, எனவே மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதேபோல் தூர்வாரும் பணியை முன்கூட்டியே பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தொடங்கி மே மாதத்துக்குள் முடிவடைக்க வேண்டும். தூர்வாரும் பணியை கண்காணிக்க விவசாயிகள் தலைமையிலான கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். தூர்வாரும் பணியை தரமாக அமைத்திட ஒவ்வொரு பணி இடத்திலும் அதற்கான விளம்பர பலகையை அமைக்க வேண்டும். தூர்வாரும் பணியில் "அ" பிரிவு வாய்க்காலில் ஆயிரம் மீட்டர் மட்டுமே தூர்வாரப்படுகிறது.
இதை மாற்றி வாய்க்கால் முழுமையும் தூர்வார வேண்டும், அதே போல் வடிகால்களையும், நீர் வரத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும். ஆற்றுப்பாசன கட்டமைப்புகளை தூர்வாருவது போல், மானாவரி பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் காட்டாறு பகுதிகளிலும் சிறப்பு தூர்வாரும் பணியையும் தொடங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அந்தந்த வாய்க்கால்களை தூர் வாரும் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் பேசுகையில், சிறப்பு தூர்வாரும் பணிக்கு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டு, அதனை அரசுக்கு அனுப்பி உரிய நிதியை பெற்று, தரமாக பணியை தொடங்கப்படும். விவசாயிகள் வழங்கும் ஆலோசனைகளை அவ்வப்போது செயல்படுத்தப்படும் என்றார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 37 ஆறுகள், 1,970 கி.மீ தொலைவுக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,524 கி.மீ தொலைவுக்கும் அமைந்துள்ளன. இதுதவிர, 924 முறை சார்ந்த ஏரிகளும், 1,428 முறை சாராத ஏரிகளும் உள்ளன. இதில் ஏரிகள் மூலம் பாசனம் பெறும் வாய்க்கால்களின் தொலைவு 2,700 கி.மீ ஆகும்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் சென்று சேரும் வகையில், தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு காவிரி பாசனப் பகுதிகளான திருச்சி மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 636 தூர்வாரும் பணிகளை 4,004 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.80 கோடியும், சென்னை மண்டலத்துக்குட்பட்ட கடலூர் மாவட்டத்தில் 55 பணிகளை 768 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.10 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்தாண்டு இதேபோல் நிதி ஒதுக்கீடு செய்தாலும் பல்வேறு பகுதிகளில் தூர்வாரும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு நிதி போதுமானதாக இல்லை.
தொடர் மழையால் வடிகால்களில் தூர்வாரப்படாததால் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். எனவே இனியும் அதுபோல் நடக்காமல் இருக்க தஞ்சை மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.