தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கன மழையாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு எடுத்து, வயல்கள், ஏரிகள், வீடுகள் என அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு   வந்துள்ளது. தொடர்ந்து ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவும், ஆர்.பி.கவுல் உள்ளடஙகிய 3 பேர் கொண்ட குழு என இரண்டாகப் பிரிந்து தமிழ்நாட்டில் உள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.




மயிலாடுதுறை மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்று வருகை புரிந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் முழுவதும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 13,500 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட பயிர்களை கடந்த வாரம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இந்த சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவை சேர்ந்த மத்திய அமைச்சகத்தின் உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான, விஜய்ராஜ்மோகன், ரஞ்சன் சிங் , வர பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் குறித்த புகைப்பட புகைப்படங்கள் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது மத்திய குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா. முருகன்,சீர்காழி பன்னீர் செல்வம், மயிலாடுதுறை ராஜகுமார் கோட்டாட்சியர் நாராயணன் தாசில்தார் சண்முகம் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.




இந்நிலையில் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா விளக்கம் அளித்தார்.


அப்போது ஹிந்தி தெரிந்த விவசாயிகள் சிலர் நேரடியாக மத்திய குழுவினரிடம் பேசத் தொடங்கினர். அப்போது மழையால் பாதிப்படைந்துள்ள நிலையில் தமிழக வேளாண் உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பை நடத்தாமல் காப்பீட்டு நிறுவன புரோக்கர்கள் போல் செயல்படுவதாக ஹிந்தியில் குற்றம்சாட்டினர். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் இவ்வாறு பேசக்கூடாது என கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.