மேட்டூர் அணை திறப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயம். இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளதாக வேளாண் துறை தகவல்.
தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெற்பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை, போதிய மழை பெய்யாதது, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் முப்போக சாகுபடி இரண்டு போக சாகுபடி ஆக குறைந்து தற்போது சம்பா சாகுபடி மட்டும் முழுமையான அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆழ்துளை மோட்டார் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவார்கள். அதன்படி தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி முதற்கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்களது வயல் களை டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் உழவு அடித்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முதற்கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆள்துளை பம்பு செட் நீரை பயன்படுத்தி இந்த குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆறுகளில் தண்ணீர் வருவதற்கு இன்னும் பதினைந்து தினங்களே இருப்பதால் மீதமுள்ள விவசாயிகளும் குறுவை சாகுபடி முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் அடுத்தடுத்த பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட முடியும் எனவே தண்ணீர் திறப்பதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட வேளாண்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.