மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.


மத்திய அரசு நான்கு வருடங்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலான அக்னிபத் என்கிற திட்டத்தை அறிவித்துள்ளது. நான்கு வருடங்கள் கழித்து இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வீரர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதற்கான ஆள் சேர்ப்பு குறித்த அறிவிப்பு என்பது விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் ராணுவத்திற்கு 4 வருடங்களுக்கு ஆள் சேர்க்கும் இந்த அக்னிபத் திட்டத்திற்கு  கடுமையான எதிர்ப்பு என்பது கிளம்பியுள்ளது. வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ரயில் போன்ற பொது சொத்துக்களை சேதப்படுத்தியும் எரித்தும் கடுமையான எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அக்னிபத் திட்டத்திற்கு நான்கு வருடங்களுக்கு இளைஞர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.




அக்னிபத் திட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் என்பது தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கியுள்ளது. குறிப்பாக தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் அக்னிபத் திட்டத்திற்கான தங்கள் எதிர்ப்புகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் தடையை மீறி திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த போராட்ட அறிவிப்பின் காரணமாக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவாரூர் புதிய ரயில் நிலைய முகப்பில் தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையிலிருந்து 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக வந்து புதிய ரயில் நிலையத்தில் நுழைய முயற்சி செய்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதற்கிடையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. 




இதனையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போது மாணவர்கள் தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து அவர்களை வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து மாலை அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக ஏராளமான காவல்துறையினர் திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண