லோன் வாங்கி தருவதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த கோவையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னையில் இளைஞர் ஒருவரிடம் ஆன்லைன் மூலமாக லோன் தருவதாக கூறி முன்பணத்தை பெற்று கொண்டு இளைஞர் ஏமாற்றப்பட்டார்.  இந்த பிரச்சினையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று கோயம்புத்தூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக இளைஞரொருவர் லோன் வாங்கி அந்த கடன் முழுவதுமாக அடைத்து உள்ளார். மேலும் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தவறான குறுஞ்செய்தி அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தியதன் அடிப்படையில் அந்த இளைஞர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதே போன்று தொடர்ந்து ஆன்லைன் மூலமாக லோன் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அதனையடுத்து தமிழக காவல்துறை தலைவர் ஆன்லைன் மூலம் லோன் தருவது என்ற செயலி செல்போனில் தொடர்ந்து வருகிறது  பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதை நம்பி யாரும் லோன் பெற வேண்டாம் என அறிவுறுத்தலை விற்றிருக்கிறார்.




இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட மகாதேவ பட்டினத்தைச் சேர்ந்த 40 வயதான தில்லை ராஜ் என்பவர் தனது ஊரில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக ஏற்பாடு செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் கார் லோன் பெற்றுத் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்த தில்லை ராஜ் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர்கள் வீடு கட்டுவதற்கும் நாங்கள் கடன் தொகை பெற்றுத் தருகிறோம் என்று கூறியதுடன் நம்பிக்கை ஏற்படும் விதத்திலும் ஆசை வார்த்தைகளை கூறியும் தில்லைராஜிடம் பேசியுள்ளனர். இதனையடுத்து இந்த கடன் தொகையை பெறுவதற்கு தேவையான செயலாக்க கட்டணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் முன்கூட்டியே செலுத்துமாறு அவர்கள் கேட்டுள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜ் மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்குகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாயை மூன்று தவணையாக செலுத்தியுள்ளார். 




அதனைத் தொடர்ந்து தனக்கு வீடு கட்டுவதற்கு லோன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் அந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட தில்லைராஜ் இணைப்பை எவ்வித பதிலும் கூறாமல் எதிர்தரப்பினர் துண்டித்துள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தில்லை ராஜ் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கோவை மாவட்டம் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த 36 வயதான சுசாந்திரகுமார் மற்றும் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 21  வயதான மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தில்லை ராஜ் இழந்த ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்ததுடன் மோசடிக்கு பயன்படுத்திய 3 செல்போன்களையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.