தஞ்சாவூர்: மக்களே உஷார்... இன்று முதல் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த நாட்களில் வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்துக்  கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


இன்னைக்கு ஆரம்பிக்கிறார் சூரியன் கத்திரி வெயிலை


ஜோதிட சாஸ்திரப்படி, ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார் என்று சொல்லப்படுகிறது. பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில்தான் என்பதால், இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21-இல் தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.




அனலாக கொதிக்கும் வெயில்


சாதாரணமாகவே அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் மற்றும் வெக்கையின் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு இடையில் காலநிலை மாற்றமும் சேர்ந்துள்ளதால் பூமி அனல் பந்துபோல் மாறி இருக்கிறது. உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மயக்கம் ஏற்படும். மேலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க கையில் எப்போதும், தண்ணீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும்.


கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வெயில் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக கொளுத்தி எடுக்கும் சாதாரண வெயிலையே தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் திணறி வரும் நிலையில் இன்று முதல் (04-05-2024) அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது.


எதை செய்யக்கூடாது... எதை செய்யலாம்!


புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் , மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் , பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது.


திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர் தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம். 


அக்னி வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?


நீராகாரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். பருத்தி துணியாலான ஆடைகளை, அதுவும் மிகத் தளர்வாக அணியுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். வெளியே செல்லும்போது கையில், குடை, தண்ணீர் பாட்டில், ஓஆர்எஸ், கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள்


கண்களுக்கு கூலர் அணிந்து வெளியே செல்லுங்கள், குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டாம். சாதாரணமாகக் குடித்த தண்ணீரை விட அதிகம் தண்ணீர் குடியுங்கள். காலை மற்றும் மாலை என இருவேளையும் குளியுங்கள், உடலுக்குச் சூடு ஏற்படுத்தும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். வெயில் நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை சாத்தி வையுங்கள் மற்றும் காலை, மாலை திறந்து வையுங்கள்.


இதுபோன்ற சில வழி காட்டுதல்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், முடிந்த வரை இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.